Sunday 15 July 2012

டெங்குவினால் நானிழந்த உறவு......:'(((((



வழமையாக பல்கலைக்கழக வாழ்க்கை பலநினைவுகளை விட்டுச்செல்லும்,ஆனால் பல்கலைக்கழக வாழ்க்கையையே நினைவாக விட்டுச்சென்றான் தம்பி கிரிதரன்.அழைத்துக்கொள்ள,அடித்துக்கொள்ள அவணியில் அவனில்லை என்றபோதும் உரிமையுடன் கொண்டாடிய உறவும் அவனதுதான் செய்வதறியாது திண்டாடிய பிரிவும் அவனதுதான். 


                                                     நம்மில் பலரால் பத்தோடு பதினொன்றாக எடுத்துக்கொள்ளப்படும் டெங்கு காச்சல்தான் அவனது இருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து.டெங்கு நோயை பற்றி நிறையவே தெளிவிருந்தும் நாங்கள் விடுகின்ற சிறு தவறுகள் உயிரிழப்புவரை எம்மை இட்டு செல்கிறது.ஒருவேளை காய்ச்சலின் ஆரம்பநிலையிலையே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்று கிரி எங்களுடன் இருந்திருப்பான்.இந்த பதிவிற்கான தேவைகூட இருந்திருக்காது.

கொழும்பின் புறநகர்ப்பகுதியான தெஹிவளை டெங்குக்கு பெயர்போன இடம்.இங்கயே கிரியின் வாழ்விடமும் அமைந்திருந்தாலும் கடந்த இரண்டுவருடமாக அவனை  டெங்கின் கஷ்டமோ நஷ்டமோ அவனை பாதித்ததில்லை. எந்த நேரத்திலும் சிரித்த,தன்னிலையை பிரதிபலிக்காத முகம் அவனது ,எதையுமே விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் இயல்பு,தமிழ் மற்றும் தேசியத்தில் முக்கியமாக தலைவரிடத்தில் அளவில்லா பற்று இவைகள் நான் கிரியிடமிருந்து அவதானித்தவைகள்.கலகலப்புக்கு பஞ்சமிருக்காது, கைகலப்பிற்கு இடமேயிருக்கது அவன் பக்கத்திலிருந்தால்.சிரித்தே சமாளிக்கும்,சமாதானப்படுத்தும் வித்தை தெரிந்தவன் அவன்.

அவன் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பதை நான் அறிந்திருந்த நேரம் அவன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போய்விட்டிருந்தான்.அதுகூட மறுநாள் அவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே தெரிந்திருந்தது எனக்கு.நான் யாழ்ப்பாணம் புறப்பட தயாராகும் போது அவனது நிலைமை கவலைக்கிடமென செய்தி வந்தது.நான் வைத்தியசாலைக்கு சென்றபோது,அவன் சுயநினைவின்றி,அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்தான்.பார்த்து கலங்க மட்டுமே முடிந்தது என்னால்.வேறென்ன செய்ய முடியும்......?????? 

மருத்துவர்கள் கிரிதரனின் சிறுநீரகங்கள் மற்றும் மூளை பாதிப்படைந்துள்ளதாகவும்,தாங்கள் இயலுமானவரை போராடுவதாக தெரிவித்திருந்தனர்.எங்களுக்குள் ஒரு நப்பாசை கிரி மீண்டுவருவானென்று.உணர்ந்துகொள்ளும் ஒரேயிடம் வைத்தியசாலைதான். இருந்த ஒரேவழி இறைவனிடம் கெஞ்சுவதுதான்,செய்தோம்.கடவுளிற்கு கேட்கவில்லைபோலும்.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அவனது நண்பன் தொலைபேசியில் கிரி நம்மை விட்டுச்சென்றுவிட்டான் என்று சொன்னபோது என்னால் அழமட்டுமே முடிந்திருந்தது.

இழப்புக்கள் எனக்கு புதியவையில்லைத்தான் ஆனால் மனதுக்கு நெருங்கியவர்களின் பிரிவுகள் எப்போதுமே எம்மை உடைத்துவிடும் வல்லமை கொண்டவை.

டெங்கு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் இப்படியான உறவுகளின் இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளமுடியும்.டெங்கு என்பது மாற்றமுடியாத நோயல்ல,சிறந்த பராமரிப்பு மற்றும் ஓய்வு மூலம் குணப்படுத்தமுடியும்.அனால் கவனமின்மையானது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடும்.கூடுதலானவரை கவனம்செலுத்துங்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது மட்டுமல்ல நீங்கள் இருக்கும்  சுற்றுப்புறத்தின் மீதும்.நுளம்பு பெருகக்கூடிய இடங்களை தேடி அழிப்பதோடு மருந்து தெளிக்கப்பட்ட நுளம்புவளைகளை பயன்படுத்துவதன் மூலம் நுளம்புகளிடமிருந்தும் அவற்றினால் பரப்பப்படும் நோய்களிலிருந்தும் உங்களை காத்துக்கொள்ளலாம்.

டெங்கு நோய்க்கிருமியை(வைரஸை) காவிச்செல்லும் நுளம்பானது (Aedes Aegypti) பொழுதுசாயும் மற்றும் பொழுது புலரும் நேரங்களிலேயே  அதிகமாக மனிதர்களை தாக்குகிறது.ஆகவே காலையில் 6-10 மணிவரையிலும் மாலையில் 4-8 மணிவரையிலும் இந்த நுளம்பிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளும்முகமாக உடலை மூடக்கூடிய ஆடைகளை அணிந்து கொள்ளுதல் சாலச்சிறந்ததாகும்.

காய்ச்சலுடன் தலைவலி/தலையிடி,கண்களில் பின்புறம் வலி,உடம்பு நோவு,வாயிற்று வலி,மிகுந்த அசதி இவைகள் டென்குக்கான சாதாரண அறிகுறிகள்.உங்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டாலோ இல்லை டெங்கு உங்களை தாக்கியுள்ளது என சந்தேகம் வந்தாலோ உடனே மருத்துவரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் இரத்தத்தில் வெள்ளையணுக்கள் ஒருலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கு குறைவாக காணப்படுமிடத்து நீங்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக கருதப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவீர்கள்.

கிரிதரன் போன்ற உறவுகளைக்காக்க இப்படியான செய்திகளை பகிர்வதோடல்லாமல்,முடிந்தவரை இவற்றை பின்பற்றுவோம்.

2 comments:

  1. கிஷோக்7 August 2012 at 11:05

    // இழப்புக்கள் எனக்கு புதியவையில்லைத்தான் ஆனால் மனதுக்கு நெருங்கியவர்களின் பிரிவுகள் எப்போதுமே எம்மை உடைத்துவிடும் வல்லமை கொண்டவை. //

    உண்மைதான் நண்பரே.....! எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் பதிவின் மூலம் கிரி எங்களுக்கும் பரிச்சயமான ஒருவாராக்கப்படுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே,தடுத்திருக்கக்கூடிய இழப்பு கிரியினுடையது...:(
      முடிந்தவரை இப்படியான இழப்புக்களை தடுப்போம்.

      Delete