Tuesday 26 June 2012

இலவம்பஞ்சல்ல...


கவியும் இருளோடு
கனத்திடும் இதயம்
காவிய-நாயகன் இல்லையென்று
கானக-நரிகள் நர்த்தனமாடும்

வரிகள்தாண்டி
வரிப்புலி வரவேண்டும்
வாடிய உள்ளங்கள்
வனப்போடு வாழ்ந்திட

சில்லென்ற பனியோடு
சிலிர்ந்திட விடியல்
சிறகின்றியே மனமும்
சிறைதாண்டிடும்

இலவம்பஞ்சல்ல-எம்
இதயம் வேண்டிநிற்கும்
ஈழமென்று
ஈனர்களும் அறிந்திடவேண்டும்...!!!

Tuesday 19 June 2012

இலங்கையும் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் போட்டி தொடரும்....




உலகக்கிண்ணம் முதலே தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கும் ரசிகரல்லாதோருக்கும் அவர்கள் எதிர்பாராத வெற்றியொன்றை பதிலாக அளித்திருக்கிறது இலங்கையணி.கடைசியாக நடைபெற்ற சிலதொடர்களில்(ஆசியக்கிண்ணம் உள்ளிட்ட) சோபிக்காமல் வந்த அல்லது தொடர்களின்(முத்தரப்புத்தொடர்,உலகக்கிண்ணம் உள்ளிட்ட) வெற்றிக்கனிகளை பறிக்கமுடியாமல் தவித்து வந்த இலங்கை நடைபெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அந்தக்குறையை தீர்த்துள்ளது.

ஐ.பி.எல் தொடரிலும் மலிங்க தவிர்ந்த இலங்கை வீரர்களின் ஆதிக்கம் குறைவாகவே காணப்பட்டது,அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானின் கை மிகவும் ஓங்கியே காணப்பட்டது(பி.பி.எல் இலும் கூட),எனவே இந்த தொடரில் இலங்கை படுதோல்வியை சந்திக்கும் என எல்லோராலும் எதிர்வுகூறப்பட்டது.ஆனாலும் அந்தக்கூற்றுக்களை தகர்த்துள்ளது இலங்கையின் வெற்றி.தொடர்முழுவதும் அனுபவ வீரர்களோடு இளைய வீரர்களும் தமது திறமையை காட்டியிருந்தனர்.அதற்கு உதாரணமாக தொடர்நாயகன் பெரேரா,இறுதியாட்டநாயகன் மத்தியூஸ்,திரிமன்னே ,சந்திமால் ஆகியோரை குறிப்பிடலாம்.
இலங்கை பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியிருந்தாலும்,தொடர்ந்துவந்த போட்டிகளில் பிரகாசித்துள்ளது.
முதற்போட்டியில் நாணயச்சுழற்ச்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களை பெற்றிருந்தது,இதில் சந்திமால் ஆட்டமிழக்காமல் 42(73),குலசேகர 18(46),பெரேரா 17(33) ,தரங்க 10(27) ஆகியோர் மட்டும் இரட்டையிலக்க ஓட்டத்தினை எடுத்தனர்.பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக குல் ,சமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களினையும் ஹபீஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.பதிலுக்குத்துடுப்பாடிய பாகிஸ்தான் 47 பந்துகள் மீதமிருக்க ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியை பதிவு செய்தது.பந்துவீச்சில் மலிங்க,குலசேகர,ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.ஆட்டநாயகனாக குல் தெரிவுசெய்யப்பட்டார். 

இரண்டாவது ஒருநாள் போட்டியும் அதே மைதானத்திலேயே நடைபெற்றது.நாணயச்சுழற்ச்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த இலங்கை 50 பந்துவீச்சுப்பரிமாற்ற நிறைவில் 280 ஓட்டங்களை பெற்றிருந்தது,இதில் டில்ஷான் ஆட்டமிழக்காமல் 119(139) ஓட்டங்களையும்,மகேல 53(45) ஓட்டங்களையும்,சந்திமால் 32(51), பெரேரா ஆட்டமிழக்காமல் 24(14) ஓட்டங்களையும் எடுத்தனர்.பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக தன்வீர்,அப்ரிடி,அஜ்மல்,ஹபீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்காக அஸார் அலி 96(119)தனியாக போராடிய போதும் தோல்வியை தடுக்க முடியாது போனது.பந்துவீச்சில் இலங்கை சார்பாக பெரேரா 6 விக்கெட்டுகளினையும் மலிங்க,குலசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளினையும் வீழ்த்தியிருந்தனர்.சிறப்பாட்டக்காரராக பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.
            
               சஜீவ

மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை 34 வயதான சஜீவ வீரக்கோன் என்ற இளம்(?) சுழல்பந்து வீச்சாளரை அறிமுகப்படுத்தியது. நாணயச்சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 .2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களினை இழந்து 12 ஓடடங்களை பெற்றிருந்த போது குறுக்கிட்ட மழையால் போட்டி இரத்துச்செய்யப்பட்டது.அப்போது குலசேகர மற்றும் மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்,அலி 7(25) மற்றும் ஹபீஸ் 0(2) ஆகியோர் ஆட்டமிழந்து செல்ல களத்தில் சபீக் 5(26) மற்றும் மிஸ்பா 0(3) ஆகியோர் இருந்தனர்.


நான்காவது போட்டியும் அதே மைதானத்திலேயே நடைபெற்றது,நாணயச்சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தையும் பின்னர் அதிரடியும் காட்ட 50 ஓவர்கள் முடிவில் 243 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது,இதில் சங்க 97 (130) ,மகேல 40(50) எடுத்திருந்தனர்.பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக தன்வீர்,அஜ்மல்,ஹபீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களினையும் குல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.பதிலுக்காடிய பாகிஸ்தானில் அஸார் அலி 81(126),மிஸ்பா 57(77),சபிக் 25(34),அஜ்மல் 12(14),யூனுஸ் கான் 1(11) ஆகியோரே ஓட்டம்/ஓட்டங்கள் பெற்றவர்கள் மற்றவர்கள் பூச்சியத்துடன் வெளியேறினார்கள்.பந்துவீச்சில் பெரேரா ஹட்ரிக் அடங்கலாக நான்கு விக்கெட்டுக்களினையும்,மலிங்க 2 விக்கெட்டுக்களினையும்,குலசேகர ,மத்தியூஸ்,வீரக்கோன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் சரித்தார்கள்.ஆட்டநாயகன் விருதை பெரேரா பெற்றிருந்தார்.



இறுதியும் தீர்க்கமுமான போட்டி இன்று(18 /06 /2012) அதே மைதானத்தில் நடைபெற்றது.இதில்நாணயச்சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களினை இழந்து 248 ஓடடங்களை குவித்திருந்தது,பரவலாக எல்லோரும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தாலும் இருவர் மட்டும் தமது அரைச்சதத்தை பூர்த்தி செய்திருந்தனர்,இம்ரான் farhat 56(63) ,ஆட்டமிழக்காமல் உமர் அக்மல் 55(61) ஆகியோரே அவர்கள்.பந்துவீச்சில் ஜீவன் மென்டிஸ்,குலசேகர தலா இரண்டு விக்கெட்டுக்களினையும்,பெரேரா,மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.பதிலுக்காடிய இலங்கை ஆரம்பத்தில் மெதுவாக ஆடினாலும் இறுதியில் வெற்றியைப்பறித்து தொடரை தனதாக்கியிருக்கிறது.இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட நான்கே பந்துகளில் ஆட்டத்தை வென்று காட்டியிருக்கிறார் அணியின் எதிர்கால தலைவரான மத்தியூஸ் 80 (76).சந்திமால் 54 (74),சங்கா 40(68) ஆகியோர் அவருக்கு துணை நின்றிருக்கிறார்கள்.ஆட்டநாயகன் விருதை மத்தியூஸ் பெற்றிருக்கிறார்.

தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும்,சிறப்பாட்டக்காரராகவும் பெரேரா தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.தொடர்முழுவதும் இரண்டு அணிகளும் போராடினாலும் இலங்கையின் கையே மேலோங்கி காணப்பட்டிருந்தது.மூன்றாவது போட்டி கூட இலங்கைக்கு சாதகமாக சென்றுகொண்டிருக்கையிலேயே கைவிடப்பட்டது.

தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய முதல் மூன்றுபேர்களில் அஸார் அலி ஐந்து இன்னிங்க்ஸ்களில் இரண்டு அரைச்சதம் உள்ளடங்கலாக 217 ஓட்டங்களினையும் சங்கக்கார நாலு இன்னிங்க்ஸ்களில் ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக167 ஓட்டங்களினையும் டில்ஷான் ஒரு சதம் உள்ளடங்கலாக 158 ஓட்டங்களினையும் எடுத்துள்ளனர்.

தொடரின் சிறப்பாக பந்துவீசிய முதல் மூன்றுபேரில் தொடர்நாயகன் பெரேரா நாலு இன்னிங்க்ஸ்களில் ஒரு ஹட்ரிக் ,ஒரு ஐந்துவிக்கெட் பெறுதி உள்ளடங்கலாக 11 விக்கெட்டுக்களையும்,மலிங்க மற்றும் குலசேகர ஐந்து இன்னிங்க்ஸ்களில் 7 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
இலங்கையின் மத்திய மற்றும் பின்வரிசை துடுப்பாட்டத்தினை தாங்கிப்பிடிக்கவேண்டிய நான்கு அல்லது ஐந்து வீரர்கள் தேர்வாளர்களுக்கு நம்பிக்கை தந்த ஒரு தொடராக இந்த தொடரை நாம் கருதலாம்......பொறுத்திருந்து பார்ப்போம் டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்துவரும் தொடர்களிலும் இலங்கையின் பலத்தை.....:)

Monday 11 June 2012

உலகத்தரத்தில் ஒரு தமிழ்ப்படைப்பு


தமிழ்த்திரையுலகத்தை பொறுத்தவரை சகலகலாவல்லவனாக மட்டுமல்லாமல் சகலத்தையும் அடுத்தநிலைநோக்கி எடுத்துச்செல்லும் சுமைதாங்கியாகவும் தன்னை வரித்துக்கொண்டவர்(இப்பொழுது பலரைக்குறிப்பிடலாம் என்றாலும் நானறிந்தவரையில் இவரே வாழும் முன்னோடி) உலகநாயகன்.எனினும் அவர் இதற்காக வணிகரீதியாக நல்லபெறுதிகளை பெற்றிருக்கவில்லை அல்லது குறைவாகவே பெற்றிருந்தார்.

அதற்கு உதாரணங்களாக ஹேராம்,ஆளவந்தான்,அன்பேசிவம், மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் பலபடங்களை குறிப்பிடமுடியும். தசாவதாரம்,தேவர்மகன் போல வெற்றிக்கனிகள் இருந்தாலும் அவையும் போதுமானவையாக தென்படவில்லை அவரின் உழைப்புக்கு...........ஆனால் இந்தமுறை நல்லதொரு அறுவடை கமலுக்கு கிடைக்குமென நம்பலாம் ஏனெனில்,கடந்த சிலதினங்கள்வரை விரைவில் வரவிருக்கும் படங்களின் வரிசையிலிருந்த விஸ்பரூபம் எனும் திரைப்படம்,இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் தவமிருக்கும் படமாக மாறியிருக்கிறது....

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று வெளியிடப்பட்ட படத்தின் முன்னோட்டக்காட்சி மற்றும் புகைப்படங்கள்,

முன்னோட்டத்தை காண சொடுக்கவும்....


நேர்த்தியான தொழினுட்பங்களோடு செதுக்கப்பட்ட சித்திரமாக மின்னுகிறது முன்னோட்டம்.கமலின் நடிப்பை இன்னொருமுறை சொல்லித்தெரிய வேண்டியதில்லையென்றாலும், படத்தில் உண்மையாகவே கமல் இரட்டை(வேட)விஸ்பரூபம் எடுத்திருக்கிறார்.அதிலும் கிருஷ்ணராக ஆண்ட்ரியாவும் ராதையாக கமலும் அபிநயம் காட்டும் காட்சியில் என்ன ஒரு நளினம் ராதையின் மன்னிக்கவும் கமலின் உடல்முழுதும்.ஆண்ட்ரியா போதுமான கம்பீரம் காட்டியிருக்கின்றார்.

இதுவரையில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கிறது கமல் சொல்லியிருக்கும் கதையுங்கூட....அமெரிக்காவில் தனது உயர்கல்வியைப் பூர்த்திசெய்து,வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒருபெண்(நிருபமா) ,அங்குள்ள நடனப்பள்ளியொன்றை நடத்திவரும் விஸ்வநாதனை திருமணம் செய்துகொள்கிறாள்.காதல்,ஊடல்,கூடலின்றி இல்லறம் நடத்தி தனது உயர்கல்வியை முடித்து வேலைக்கு செல்ல தொடங்குகிறாள்.

இதன்பின்தான் கதையின் போக்கில் மாற்றம் வருகிறது, இப்பொழுது திருமணத்தை முறிக்கவிரும்புகிறாள் நிருபாமா.இதற்காக ஒரு தனியார் துப்பறிபவரை வாடகைக்கு அமர்த்தி விஸ்வநாதனிடம் உள்ள பலவீனங்கள்,தீய பழக்கவழக்கங்களை அறியமுற்படுகிறாள்.

இதன்போதுகிடைக்கும் துப்புத்தான் மிகுதிக்கதையை கொண்டுசெல்கிறது......இதுதான் கமல் சொல்லியிருக்கும் கதை,மிகுதியை வெள்ளித்திரையில் பார்க்க காத்திருப்போம்.


இரண்டாவது இந்தபடம் சிங்கப்பூரில் இடம்பெற்ற சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது,படத்தைப்பார்த்த உலகநாயகனின் நண்பரும் பிரபல ஆங்கிலப்படத் தயாரிப்பாளருமான பேரி ஒஸ்போன் அவர்கள் தனது தாயரிப்பில் கமலை படமொன்றை இயக்கி நடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.அதற்கு கமலும் ஒத்துக்கொண்டுள்ளாராம்.

கமல் தன் குரலில்....


இந்த இரண்டுமே படத்தின் தரத்தையும் நேர்த்தியையும் அறிய போதுமானவை......விஸ்வரூபத்தை தொடர்ந்தும் நல்ல விருந்துக்காக காத்திருப்போம்.


Sunday 10 June 2012

வேண்டாம்...

மீண்டுவந்திடக்கூடாது
அந்தநாள்
இருந்துவிடட்டும்
கதைசொல்லக்கூடிய
ஞாபகமாக மட்டும்...

இறைவனும்
அருள்தரட்டும்
இறந்தவர் மீண்டுவர
இதயங்கள்
கரையுடைத்து
கண்ணீர் பாச்சட்டும்
கரைத்திட
நிறைந்த சோகங்களை...!

மழைநாள்....



வீரனைப்பார்க்க
வானம்வெளிச்சம் பாச்சியது
இடிக்குப்பயந்து
அழுதுகொண்டிருந்தார்
சிலையாகி
நின்றுகொண்டிருந்த போர்வீரர்
மறைக்க
மேகம் தான்அழுதுகொண்டிருந்தது....

வலிகளுடன்


பிரிந்தபின்னே
பிரிந்திடயெதுமின்றி
உனைப்பர்த்தேன்
முள்வேலிக்குள்ளே...!

உன்னைப்பார்த்ததும்
கருவிழந்துபோனது
என்வாழ்க்கையும்
வழமையாகவே
உருவிழக்கும்
என்வார்த்தைகளோடு...!