Saturday 28 April 2012

தேவதை

கன்னங்கள் குழியும்
காந்தச்சிரிப்பு..
கவிபாடும் அவள்
கண்கள்...!

காற்றோடு இசைமீட்டும்

கார்கூந்தல்..
கனியவைக்கும்
கனீர் குரல்...!

இனிமையாய்

பெண்மைக்கே
மேன்மை-சேர்க்கும்
கன்னியை
என்னிடம் தந்தான்
ஏந்திழை
எனக்குரியதென
எழுத மறந்த
என்னிறைவன்...!!!

அம்மா

ஈரைந்து திங்கள்
உன்னுள்ளே எனைக்காத்து
ஈற்றிலே
உயிருடன் மெய் தந்தாய்...!

பசிதீர்க்க
பாலாகும் உன்னுதிரம்
நானாட
உன்சேலை ஊஞ்சலாகும்...!

நான் உண்ணும்வரை
காத்திருந்தாய்
நான் உண்ணும்வேளை
நோன்பிருந்தாய்...!

வெற்றிகளில்
எனையேற்றிக் கொண்டாடினாய்
தோல்விகளில்
எனைத்தேற்றி நீவாடினாய்..!

இறைகொண்ட 
நியவடிவம் நீயல்லவா
மறுமுறை நீயெந்தன்
மகவாக வேண்டும்
மகனாக என்வேண்டுகை
இதுவல்லவா...!





வாழ்த்துக்கள்

விடைபெறும் நேரம் வந்தாலே
மனமுடைந்து போகும்
பழைய நினைவுகளெல்லாமே
மனக்கண் முன்னால் வந்தாடும்

நினைக்கும்போதே இனிக்கும்

சின்னச்சின்ன சந்தோசங்கள்
சிறுபிள்ளைத்தனமாய்  தோன்றும்
குட்டிக்குட்டி கோபங்கள்

எம்மையும் நிமிர வைத்த
மனது நிறைந்த வெற்றிகள்
மமதை களைந்து
பாடம் தந்த தோல்விகள்

எதிர்செல்லும் பாதையில்
தட்டிச்செல்லும் தடைகள்
எதிர்பார்க்காத வேளையில்
எட்டிப்பார்த்த காதல்...

புதிதாய் வந்த உறவுகள்
பாதியில் விட்டு சென்ற
பழகிய நண்பர்கள்...

தப்பான செய்கைகள்
தந்த அனுபவ முடிவுகள்
சரியாக செய்ய
கிடைக்காத தருணங்கள்

வருடங்கள் முடியும் போது
நெருடிச்செல்லும் சிலதுகள்

இனியொரு பொழுதாக்கி
இனியவை செயலாக்க
விட்டுச்சென்ற நல்லவை
மீண்டும் தொடர வாழ்த்துக்கள்...!

பெண்ணே...!

ஏன்டி பெண்ணே என் கண்ணில் பட்ட
உந்தன் பார்வை வந்து..
என் உசிருக்குள்ள தீயமூட்ட
எந்தன் நினைவெல்லாம் நீயே வந்த..!

என் பார்வையில் நீ வந்த

எனக்குள்ள வேகம் உருவாச்சே..
இரவெல்லாம் கனவில் வந்த
என்னுறக்கம் கெட்டு போச்சே..!

கண்ணெதிரே நீ வந்தா
காட்டுதீயா எரியுது என் மனசு..
கன்னியே நீயும் வந்து
கலந்துவிடு என்னோடு..!

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெட புழுதியில் எறிந்தோம்.
நானிலம் காத்திட சேனை கொண்டும்
எழுகையில் விழுந்தோம்...!

இடிவந்து மடிவிழ

கூடியவர் மடிந்திட
விடிகையில் இருன்டிட
விடிவெள்ளி பார்த்திருந்தோம்..!

பேதமின்றி பேடியர் சேர்ந்து
ஆடிய சதியாட்டத்தில்
வேலியில்லா பயிராய்
வெள்ளாடு மேய நின்றோம்.
நாதியில்லா இனமாய்
நாம் வாடிநின்றோம்...!

காக்கைவீட்டில்
குயில் இருப்பதுண்டு.
கருநாகம் இருக்குமெண்டு
முன்னவர்கள் சொன்னதில்லை...!

உதிர்ந்த பின்னும்
வேணில்காலமே சருகின் வேண்டுதல்.
கனியமுன் கொய்த காயும்
தான் விதையாக
சேயின் வரவிற்காய் காத்திருக்கும்...!

இனியொரு படை செய்தால்
பிளவுக்கு விடை கொடுத்து
புதியதோர் புள்ளி
பூமியில் வைத்திடு தலைவா..!

Friday 27 April 2012

புதைபொருள் ஆராச்சி....


அமெரிக்கா:நாங்க புதைபொருள் ஆராச்சியில ஈடுபட்டிருந்த போது நிலத்துக்கு கீழே 100 அடியில telephone wire இருந்திச்சு, ஆகவே நம்ம மூதாதையர்கள் பலவருசத்துக்கு முன்னமே telephone பயன்படுத்தியிருக்காங்க ....:)

ரஷ்யா:நாங்க புதைபொருள் ஆராச்சியில ஈடுபட்டிருந்த போது நிலத்துக்கு கீழே 200 அடியில current wire இருந்திச்சு, ஆகவே நம்ம மூதாதையர்கள் பலவருசத்துக்கு முன்னமே current பயன்படுத்தியிருக்காங்க ....:D

இலங்கை:நாங்க புதைபொருள் ஆராச்சியில ஈடுபட்டிருந்த போது நிலத்துக்கு கீழே 1000 அடிவரைக்கும் எந்த wire ஐயும் காணல்ல, ஆகவே நம்ம மூதாதையர்கள்
பலவருசத்துக்கு முன்னமே wireless technology  பயன்படுத்தியிருக்காங்க ....:O

அமெரிக்கா :அடேய் கொலம்பஸ் ,இவனுகளெல்லாம் இருக்கிற உலகத்துல ஏன்டா நம்ம நாட்ட கண்டுபிடிச்ச.....???

வாழ்கின்றோம்

மரணங்கள் பார்த்து
மனமெல்லாம் மரத்துவிட்ட என்னினத்துக்கு
மானமெனும் மாயை மட்டுமே
மாற்றுடையாய்...!

எம்மவர் ரணங்கள்
விவரண சித்திரங்கள்-ஊடகங்களுக்கு
காயம் கொண்ட விழுப்புண்கள்
காட்சிப்பொருட்கள்

காட்டிக்கொடுப்புகளும்
காந்தியமும்
கருணைக்கொலை புரிந்தன
குற்றுயிராய் இருந்த தமிழை

தன்னுயிர் தந்து மனிதம் காத்த கர்ணர்கள்
தமிழ்க்கொடி படரதம்முடல்
தந்த பாரி வள்ளல்கள்
தாலாட்டின்றியே தாழுறக்கம் சென்றவர்கள்.

மாற்றான் நெருப்பில்
மறைவாய் கூதல்காய்ந்தவர் நாங்கள்
மறம் என்பதை மறந்து
அறம் இன்றி வாழ்கின்றோம் இன்றும்...!

புதிய போகி

புதியன புகுதலும்
பழையன கழிதலும்
மனதிலும் மனதாலும்.

எம்தலைவா

வற்றிப்போன குளமல்ல
வழங்கிப்போகும் வள்ளல்
இறங்கிப்போகும் இனமல்ல
இரங்கிப்பேசும் மனம்...!

புறம்பேசும் குணமல்ல
புரட்டிப்போடும் மறம்
ஓவியக்கதையல்ல
காவிய வாழ்க்கை...!

புரண்டோடும் வீரம்
புறமோடும் எதிரும்
உயிர்கொடுக்கும் தீரம்
உன்னத தியாகம்...!

வரலாறே வழிகாட்டியாய்
வரலாற்றை நீ கட்டினாய்
சிதைந்தால் ஈழதேசம்-என்
சிதைமீதுதான் சாயணும்
என்றவன் நீ ...!

உடலோடு முடியாது
உந்தன் வாழ்வு
உதட்டோடு மடியாது
உந்தன் கனவு...!

ஏமாந்த சில

அந்திசாயும் பொழுது
துகிலுரிந்த பொய்கள்
கறைபடிந்த கைகள்
இறைமையின் இறுமல்..!

சூரியப்பூ முகிழும்
இனிமை மலரும்
குறுநகை குவியும்.

கற்பனை கலையும் நேரம்
மழைமேகமாய் மாறும்
ஏதிலி வாழ்க்கையும்...!

நம்பிக்கை

மீட்பர்
மரித்தும்
உயிர்ப்பார்.

வேறாக

குவித்த புருவமும்
பனித்த கண்களும்
நிமிர்ந்த பார்வையும்
தளர்ந்த உள்ளமும்

வெளியோர

பார்வை வேறாக
உள்ளூர
நீயே தீயாக...!

விடலைகள்

காய்க்கபிறந்த பூவெல்லாம்
கருகி விழுந்நேரம்
அதில் தேன்குடிக்க
அலைகிறது தேனிக்கூட்டம்.

உன்னோடு

மகரந்தம் சுரக்கும் தேனா
இதழோடு வடியும் பன்னீரா
மனதோடு மயக்கும் மானே
உன்னோடு வாழ நான்வரவா..

இனியது உந்தன் வதனமா
இளையவள் உந்தன் வனப்பா
நீ பூத்துக்குலுங்கும் மரமா
உன் மடிதூங்க நான் வரவா..

உயிர்வரை நோகும் உணர்வால்
உள்ளம் குதிக்கும் நீவா
உலகின் அழகியநதி நீயா
உன்னில் நீராடநான் வரவா..

பெண்மையென்பது மென்மையா
பெண்மைக்கே உன்னால் மேன்மையா
வெண்மதியால் செய்தவுடலா
நிலாக்காய நான் வரவா நான்வரவா...!