Thursday, 17 May 2012

கடவுள்

தூக்கம்
துறந்த நிலையில்
கனவை எதிர்பார்ப்பது
கடினம்தான்...
சிலநேரம்
என்னோடு கனவும்
தூங்கியிருக்கும்
ரணக்களைப்பு
நிஜ இழப்பு
காரணமாக இருக்கலாம்.

எதிர்பார்ப்போடு
பிறந்தாலும்
நிறைவேறாமலே
மடிந்துகொண்டிருந்தது
என் பொழுதுகள்.

ஏமாற்றமும்
கூடவே
இயலாமையும்
என்னை
தின்றுகொண்டிருந்தன.

இறுமாப்பென்பது
மறந்துபோய்
இறைவனை
மன்றாடிக்கொண்டிருந்தேன்
இழப்பென்பதும்
இயலாமையும்
கடவுளை
ஞாபகப்படுத்தும்
கருவிகளாக...

நடுநிலை
நம்பிக்கை கடந்து
அதிகாலை பத்திரிகைகளும்
அனைத்தூடக செய்திகளும்
அன்றாட தேவையானது.

சிதறிப்போன
உடலும்
கருகிப்போன
உறவுகளும்
கண்முன்னாடும் போது
கையாலாகாத்தனம்
என்ன செய்ய?
பதறவைக்கும் செய்திகள்
பொதுநலம் தாண்டியும்
சுயநலம் காட்டவைக்கும்
என்னினத்தைமூடி
என்குடும்பம் நிற்க்கும்.

ஒருவார்த்தை
ஒரேயொருவார்த்தை
ஓங்காரமாய்
ஒலித்திட்டால்போதும்
"நாங்கள் இங்க இருக்கிறம்"
தவியாய்
தவித்துக்கொண்டிருந்தேன்
கேட்டுவிட.

நம்பிக்கை வேகமாக
கரைந்துகொண்டிருந்தது
மனதோடு உடலும்
சோர்ந்திருந்தது

புயலில்
கிடைத்த துரும்பாக
பூகம்பத்தில்
எஞ்சிய குடிலாக

ஒரு அழைப்பு
"நாங்கள் வந்திட்டம்"
உலகமே என்காலடியில்
உன்னதமானது அந்நிமிடம்.
"கடவுள் இருக்கிறார்"
சொல்லிச்சென்றன
குழுமிய உறவுகள்.


"முள்ளிவாய்க்கால்
எங்கள்
முடிவல்ல
ஆரம்பமே"
என் நண்பன். 

No comments:

Post a Comment