Tuesday, 29 May 2012

காதல்

படம்தாண்டியும்
வாழ்ந்திடும்
பாத்திரம்போல
நீ
வாழ்கிறாய்
மனதோடு
காதல்....

கரைகடந்தும்
வந்திடும்
அலைபோல
நான்
துடிக்கிறேன்
உன்னோடு
வாழ..........

கள்ளவைத்தியர்....

நிறைமாத மேகத்தின்
பிரசவத்திற்காய் காத்திருந்தன
குறைமாதப்பயிர்கள்-கருக்
கலைப்புச்செய்து போனார்
அசேதனமெனும் கள்ளவைத்தியர்...

Friday, 25 May 2012

காத்திருப்பு

என்நெடுநாள் ஆசைகளில்
அவளின் ஸ்பரிசமுமொன்று..
தொட்டுவிட துடித்தாலும்
உடைந்துவிடக்கூடும்
நட்பெனும் போர்வை
எனும் பயமும் கூடவே...!

பசுத்தோலோடு புலி
பசிக்கும் காதலிற்காய்
கானல்நீரான காதல்
கைக்கெட்டும் என்று..!

காலைக் கடற்க்கரைபோல..
மலரத்துடிக்கும் முகிழ்போல..
பன்னீராகும் பனித்துளிபோல..
என்வரிகளின் உள்ளுறைந்தது
அவள்நினைப்பு...!

வாசிக்கமட்டும் தெரிந்த
கவிதைகளை
ரசிக்கவும்
வைத்தவளவள்..!

அவளே விதையாக
மலர்ந்த கவியோடு
என்னை சலனப்படுத்தும்
வருகைக்கான காத்திருப்பு...!!!

Monday, 21 May 2012

அவள்

கண்ணாலே
கவிபாடிய
கவியவள்.

அழகாலே
அசைத்த
அழகியவள்.

திமிராலே
நெருடிய
தையலவள்

வனப்பிலே
வளைத்த
ஏந்திழையாள்.

கார்குழலால்
வருடியபெண்
கொடியாள்.

காந்தகுரலில்
மயக்கிட்ட
காரிகையவள்.

Thursday, 17 May 2012

கடவுள்

தூக்கம்
துறந்த நிலையில்
கனவை எதிர்பார்ப்பது
கடினம்தான்...
சிலநேரம்
என்னோடு கனவும்
தூங்கியிருக்கும்
ரணக்களைப்பு
நிஜ இழப்பு
காரணமாக இருக்கலாம்.

எதிர்பார்ப்போடு
பிறந்தாலும்
நிறைவேறாமலே
மடிந்துகொண்டிருந்தது
என் பொழுதுகள்.

ஏமாற்றமும்
கூடவே
இயலாமையும்
என்னை
தின்றுகொண்டிருந்தன.

இறுமாப்பென்பது
மறந்துபோய்
இறைவனை
மன்றாடிக்கொண்டிருந்தேன்
இழப்பென்பதும்
இயலாமையும்
கடவுளை
ஞாபகப்படுத்தும்
கருவிகளாக...

நடுநிலை
நம்பிக்கை கடந்து
அதிகாலை பத்திரிகைகளும்
அனைத்தூடக செய்திகளும்
அன்றாட தேவையானது.

சிதறிப்போன
உடலும்
கருகிப்போன
உறவுகளும்
கண்முன்னாடும் போது
கையாலாகாத்தனம்
என்ன செய்ய?
பதறவைக்கும் செய்திகள்
பொதுநலம் தாண்டியும்
சுயநலம் காட்டவைக்கும்
என்னினத்தைமூடி
என்குடும்பம் நிற்க்கும்.

ஒருவார்த்தை
ஒரேயொருவார்த்தை
ஓங்காரமாய்
ஒலித்திட்டால்போதும்
"நாங்கள் இங்க இருக்கிறம்"
தவியாய்
தவித்துக்கொண்டிருந்தேன்
கேட்டுவிட.

நம்பிக்கை வேகமாக
கரைந்துகொண்டிருந்தது
மனதோடு உடலும்
சோர்ந்திருந்தது

புயலில்
கிடைத்த துரும்பாக
பூகம்பத்தில்
எஞ்சிய குடிலாக

ஒரு அழைப்பு
"நாங்கள் வந்திட்டம்"
உலகமே என்காலடியில்
உன்னதமானது அந்நிமிடம்.
"கடவுள் இருக்கிறார்"
சொல்லிச்சென்றன
குழுமிய உறவுகள்.


"முள்ளிவாய்க்கால்
எங்கள்
முடிவல்ல
ஆரம்பமே"
என் நண்பன். 

Wednesday, 16 May 2012

பெண்...


தன்கலையார்வம்
தணித்திட
மெய்யொன்று
வேய்தான் பிரம்மன்...!

கயலை கண்ணாக்கி
வில்லை இமையாக்கி
பழத்திலே கன்னமாக்கி
மலரை இதழாக்கி

முழுமதியை முகமாக்கி
நதிவளைவை அங்கமாக்கி
கமலத்தில் பாதமாக்கி
காரைக் குழலாக்கி...!

காளையரை
கடைந்திட
உலவிடவிட்டான்
உலகிலே
அழகுப்பெண்ணாக...!

Monday, 14 May 2012

சிணுங்கள்

எழுஸ்வரங்கள்
போதுமா
காதலை
கானமாய் இசைக்க..?

எட்டாய்-உந்தன்
சிணுங்கள்
சேர்க்கவா
இதமாய் கோர்க்க..?

மெல்லினம்
இடையினம்
நடுவே உன்குழையல்
இழைத்திடவா..?

குயிலினம்
கூடவே
உன்னினம்
இணைத்திடவா...?

அன்னை.

என்னுடலோடு
உதிரமும்
உயிரும்
உனதல்லவா...?

உனதன்போடு
தியாகங்கள்
செப்பிட-என்
நாப்போதுமா...?

Wednesday, 9 May 2012

காதல்.


நெய்தலில்
நெய்து
முல்லையை
கொய்து

பாலையில்
பரிந்து
குறிஞ்சியாய்
மலர்ந்து

மருதத்தில்
விளைந்தது
தையலோடு
தைத்த காதல்....

Tuesday, 8 May 2012

முத்து

கடற்கரை
மண்மீது
உன்பெயரோவியம்..

உன்போலவே
எத்துனை
வளைவுகள்
உன்பெயரிலும்..

கணப்பொழுதில்
கடலலை
கவர்ந்து சென்றது
பெயர்வரையை..

கரைதட்டிய
கடற்காற்று
காதில் சொன்னது
"அழகிய முத்துக்கள்
கடலிற்கே சொந்தம்"...!

Sunday, 6 May 2012

உன்வரவோடு

இதமாய் ஒரு
நிலநடுக்கம்
இதயத்தினூடே..!

மென்மையாய்
ஓராழிப்பேரலை
என்னுடலிலும்..!

பிரகாசமாய்
பகலவன்
என்கண்களில்..!

நடனமாடும்
என்நா
இசையின்றி...!

சாவிலும் காதல்

மனமிணையில்
மெய்யின்றி
சேர்தல்
பொய்யாகிடாதோ...?

கருமேகமாய்
மோகம்
மழைதூவி
கலைந்திடாதோ...?

சங்கமிக்கையில்
இங்கிதம்
இனிமையை
தந்திடாதோ...?

சாவிலும்
காதல்
முழுமையை
தந்திடாதோ...?

Saturday, 5 May 2012

நஞ்சமிர்தம்

அம்புக்கிணை
அவள்பார்வை
அங்குசமே
அவள்பேச்சு..!

அமிர்தத்துக்கிணை
அவள்காதல்
அசைந்தயுகம்
அவளோடுநொடி..!

அலைபோல
கரைகண்டதும்
எழுந்துவிட்டேன்
அவளைத்தழுவிட...!

சிதைத்தது

சிதைத்தது
சிலைவரை
கருவறுப்பு
கல்லறைவரை..!

சிறுத்தைகளின்
சினம்
சிலைதாண்டியும்
சிந்திடக்கூடும்..!

கல்லறைமேனியர்
கடலோடு தாயகம்
காத்திடக்கூடும்..!

பயங்கொண்ட பௌத்தம்
எச்சங்களையும்
மிச்சங்களையும்
துடைத்தது..!

நியதிகள்
நிந்தனைகள்
நீக்கிட இலங்கைக்கு
நீசமற்ற நண்பர்கள்..!

இழந்ததும் அழுதிட
வழியில்லை
இறந்தவரை தொழுதிட
இடமில்லை தமிழுக்கு...!

Tuesday, 1 May 2012

தொழிலாளி.

நீ சிந்தும்
வியர்வை கொண்டுதான்
பாரே பாதம் கழுவுகிறது...!

உனக்காகத்தான்
பகலவனே...!
உன்னோடு
ஊடல் கொள்ளத்தான்
உலகையே
மழைத்துளி தழுவியது...!

விண்ணோடு ஒடம்செல்ல
வீட்டோடு வாழ்க்கையோட
உந்தன் தொழில்தானே
உலகிற்க்கே ஆதாரம்...!